கயிற்றை தாண்டினால் வாகனங்கள் பறிமுதல் வேலூரில் டிராபிக்ஜாமை குறைக்க ஆய்வு

வேலூரில் போக்குவரத்தை குறைக்க போலீசார் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். எல்லைக் கயிற்றை தாண்டி வாகனங்கள் நிறுத்தப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினர்.

Update: 2021-07-21 15:00 GMT

பைல் படம்

வேலூர் மாநகர் பகுதிகளில் தினமும் தீராத பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெரிசல் . சாலையின் கட்டமைப்பு தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப மேம்படுத்தப்படவில்லை . இதனால் மாநகரில் ஏதாவது வாகனங்கள் பழுதாகி நின்றால் , கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் .

அந்தளவிற்கு குறுகிய சாலைகளாக உள்ளது . அதோடு சாலையோரங்களில் நோ - பார்க்கிங் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதினாலும் , சாலையோரங்கள் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது .

எனவே மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எஸ்பி செல்வகுமார் உத்தரவின் பேரில் , ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையிலான போலீசார் வேலூர் கிரீன் சர்க்கிள் முதல் பாகாயம் வரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆய்வு செய்து வருகின்றனர் .

அதேசமயம் பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது . இதில் , சாலையோரங்களை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகளவில் கருத்து தெரிவித்திருந்தனர் .

அதேபோல் கனரக வாகனங்கள் மாநகரில் நுழைவதை தடுத்து , மாநகருக்கு வெளிப்புற சாலைகளில் இயக்கவும் , முக்கிய சிக்னல்களில் சிகப்பு விளக்குகள் எரியும் நேரத்தை 40 வினாடிகளில் இருந்து 20 வினாடியாக குறைத்து இயக்குவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது .

இது குறித்து ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் கூறுகையில் , வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது . ஓரிரு நாட்களில் போக்குவரத்து சோதனை முறையில் மாற்றம் செய்யப்படும் .

வேலூர் சாரதி மாளிகை பகுதியில் அண்ணா சாலையில் கார்கள் நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும் . அங்குள்ள கயிற்றை தாண்டி வாகனங்கள் நிறுத்தினால் அதனையும் பறிமுதல் செய்யப்படும் , என்றார் .

Tags:    

Similar News