குழந்தைகளுக்கு 23ம் தேதி முதல் நிமோனியா தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி முதல் நியுமோகோக்கல் கான்ஜூகட் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .

Update: 2021-07-19 13:47 GMT

குழந்தைகளுக்கு 23ம் தேதி முதல் நிமோனியா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

குழந்தைகளை நியுமோகோக்கல் நிமோனியா பாக்டீரியா பெரும்பாலும் பாதிக்கிறது . இதனால் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், இருமல், மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும். மேலும் சுவாசத் துளிகள் மூலம் பரவும் இத்தொற்று கடுமையாக இருந்தால் குழந்தைகளின் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். இதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நியுமோகோக்கல் கான் ஜூகட் தடுப்பூசி ( பி.வி.சி. ) வழங்க தமிழக அரசு சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி தடுப்பூசி 6 வாரங்கள், 14 வாரங்கள் மற்றும் மீண்டும் 9 மாதத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. நியு மோகோக்கல் நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க இந்த பி.சி.வி. தடுப்பூசியின் மூன்று தவணைகளையும் அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது . இந்த தடுப்பூசி குழந்தையின் வலது தொடையில் நடுப்பகுதி உள்தசையில் போடப்படுகிறது .

இந்த தடுப்பூசி முகாம் கடந்த வாரம் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் . அதன்படி வேலூர் , திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது : நியுமோகோக்கல் நிமோனியா பாக்டீரியாவால் குழந்தைகளுக்கு காது கேளாமை , மூளை வளர்ச்சிகுறைபாடு , பக்கவாதம் மற்றும் கடுமையான நோயினால் மரணம் கூட நிகழலாம் . சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லையெனில் மரணத்தை ஏற்படுத்தும் . காதில் அடிக்கடி சீழ் வடிதல், காது கேட்கும் திறன் குறைபாடு ஏற்படும். கடுமையான காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் .

நியுமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசியை குழந்தை பிறந்த ஒன்றரை மாதத்தில் முதல் தடுப்பூசியும் , 2 வது தடுப்பூசி மூன்றரை மாதத்திலும், 9வது மாதத்தில் மூன்றாவது தடுப்பூசியும் போடப்படுகிறது. கடைசியாக போடப்படும் தடுப்பூசி ஊக்கத்தடுப்பூசியாகும். அதன்படி ஒரு ஆண்டிற்கு வேலூர் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 969 குழந்தைளுக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் குழந்தைகளுக்கும், ராணிப் பேட்டை மாவட்டத்தில் 14 ஆயிரத்து 820 குழந்தைகளுக்கும் போடப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வரும் 23 ம் தேதி முதல் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இந்த தடுப்பூசியின் விலை ரூபாய் 12 ஆயிரம் ஆகும் . தமிழக அரசு சார்பில் இலவசமாக குழந்தைகளுக்கு போடப்படுகிறது. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினர் .

Tags:    

Similar News