வேலூர் மாநகராட்சியில் வரி பாக்கி வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ்
வேலூர் மாநகராட்சியில் வரியினங்கள் வசூல் மந்தமாக உள்ளதால் ஆண்டு வருவாய் ரூபாய் 127 கோடியில் 40 சதவீதம் மட்டுமே வசூலாகியுள்ளது
வேலூர் மாநகராட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மண்டலத்திற்கு தலா 15 வார்டுகள் வீதம் மொத்தம் 60 வார்டுகளை கொண்டுள்ளது.
மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வணிகவளாகங்கள் , கடைகள் கட்டப்பட்டுள்ளது . மொத்தம் 2,500 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் மாத வாடகை வசூலிக்கப்படுகிறது . அதோடு மாநகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் என்று மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இந்த வரியினங்கள் மூலமாக மாநகராட்சிக்கு ஆண்டு வருவாய் ரூபாய் 127 கோடி வரையில் கிடைத்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வரியினங்கள் வசூலில் மந்தநிலை தொடர்கிறது. கொரோனா பாதிப்பினால், வரிவசூல் பெரிய அளவில் முடங்கியுள்ளது. மாநகராட்சிக்கு ரூபாய் 127 கோடி ஆண்டு வருவாய் கிடைத்துக்கொண்டிருந்த நேரத்தில் 60 சதவீதம் வரையில் வருவாய் வெகுவாக குறைந்து, 40 சதவீதம் மட்டுமே வசூலாகியுள்ளது.
இதனால் மாநகராட்சியில் வரியினங்கள் பாக்கி வைத்துள்ளவர்களுக்கு மாநகராட்சி சார்பில் வரி வசூலிப்பவர்கள் மூலமாக நோட்டீஸ் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.