நாளை முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாவதால், பகலில் வெளியே வர வேண்டாம்

நாளை முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாவதால், குழந்தைகள், முதியவர்கள் பகலில் வெளியே செல்ல வேண்டாம் என வேலூர் கலெக்டர் வேண்டுகோள்

Update: 2022-05-03 14:46 GMT

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் 

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 102 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதுநாள் வரையில் மிக உயர்ந்த வெப்பநிலையான 108.14 டிகிரி பதிவாகியுள்ளது. இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாளை முதல் கத்தரிவெயில் காலம் தொடங்க உள்ளதால், வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, பகல் 11 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம்.  அவ்வாறு செல்ல அவசியம் ஏற்பட்டால் உரிய பாதுகாப்புடன் அதாவது போதுமான குடிநீர், குடை, தொப்பி ஆகியவற்றுடன் செல்ல வேண்டும். பொதுமக்கள் வெயில் காலங்களில் அடிக்கடி தண்ணீர் மற்றும் நீர்மோர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

லேசான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்,  இளநீர், நீர்ச்சத்துள்ள இயற்கையான பழவகைகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

ஆடு, மாடு, கோழி போன்ற வளர்ப்பு பிராணிகளை நிழல் பகுதிகளில் வைத்து அதற்கு தேவையான குடிநீர் மற்றும் தீவனம் அளித்து பராமரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News