தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
பேரணாம்பட்டு அடுத்த ராஜக்கல் கிராமத்தில் தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்;
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ராஜக்கல் கிராமத்தில் தார் தொழிற்சாலை அமைக்க கலவை எந்திரம் உள்ளிட்டவைகள் கொண்டுவரப்பட்டு உள்ளன.
தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் மாதம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பேர்ணாம்பட்டு தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களிலும் மனு அளித்தனர்.
இது குறித்து பேரணாம்பட்டு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தார் தொழிற்சாலை அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அழிஞ்சி குப்பம், ஆம்பூர், குடியாத்தம் இணைப்பு சாலையில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை ஈடுபடனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.