வேலூரில் நாளை 9 புஷ்ப பல்லக்குகள் பவனி
சித்ரா பௌர்ணமியையொட்டி அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்குகள் பவனி வரும் விழா நாளை நடைபெறவுள்ளது;
வேலூர் மாநகர பகுதியில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று புஷ்ப பல்லக்குகள் பவனி வரும் விழா கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.
வேலூர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சித்ரா பௌர்ணமியன்று நடைபெறும் புஷ்ப பல்லக்கு திருவிழா முக்கியமானதாகும். பல்வேறு அமைப்புகள் சார்பில் வேலூரில் புஷ்ப பல்லக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த புஷ்ப பல்லக்குகளில் எந்த பல்லக்கு நன்றாக உள்ளது என்பதை பார்க்கவும், சாமி தரிசனம் செய்யவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேலூருக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வர்.
நாளை (வெள்ளிக்கிழமை) சித்ரா பௌர்ணமியையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர், அரிசி மண்டி உரிமையாளர்கள் சார்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகர், வெல்ல மண்டி உரிமையாளர்கள் சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர், பூ மார்க்கெட் தொழிலாளர்கள் சார்பில் லாங்கு பஜார் வேம்புலி அம்மன், மோட்டார் வாகன பணியாளர்கள் சங்கம் சார்பில் விஷ்ணு துர்கை அம்மன் உட்பட 9 புஷ்ப பல்லக்குகள் ஊர்வலத்தில் பங்கேற்க உள்ளது.
அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு மண்டி வீதி வழியாக இரவில் வருகிறது.
மண்டி வீதி வந்தடையும் பூப்பல்லக்குகளில் வீற்றிருக்கும் உற்சவ மூர்த்திகளுக்கு அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டு வானவேடிக்கைகள் நடக்கிறது.
பின்னர் மேளதாளங்களுடன் 9 பூப்பல்லக்குகள் புறப்பட்டு லாங்கு பஜார், கமிசரி பஜார், பில்டர் பெட்ரோடு திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அண்ணாசாலை வழியாக கோட்டைக்கு வருகிறது. அங்கு வானவேடிக்கைகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.