வேலூரில் அதிகரிக்கும் வெயில் தாக்கம்

இந்த வாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. நேற்று 97.5 டிகிரியை தொட்டுள்ளது.

Update: 2022-03-11 16:41 GMT

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காணப்பட்ட கானல் நீர்

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வெயிலின் கொடுமை வேலூரில் தான் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

கடந்த ஆண்டு மார்ச் 30-ந் தேதி 106.3 டிகிரியை தொட்டது. தொடர்ந்து 110 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது. 

இந்த ஆண்டு கனமழை காரணமாக மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரிகள் நிரம்பி உள்ளன. பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டது. கடந்த ஆண்டைவிட வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாதத்தில் குறைவாக காணப்பட்டது.

ஆனால் மார்ச் மாதம் 1-ந் தேதி 95.9 டிகிரி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. அதற்குப் பிறகு சில நாட்கள் மந்தமாக காணப்பட்டது.

இந்த வாரத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கடந்த 8-ந் தேதி 94.6 டிகிரி, 9-ந் தேதி 97.3 டிகிரி நேற்று 97.5 டிகிரியை தொட்டுள்ளது.

இதனால் பகல் நேரங்களில் சாலையில் மக்கள் நடமாடவே முடியாத அளவுக்கு சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.கண் எரிச்சலும் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி விடும் அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் வேலூர் நகர சாலைகள் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வற்ற தொடங்கி விட்டன. வேலூர் மலைக்காடுகளில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் வாடி வதங்கி கருகியது. நடந்து சென்ற பாதசாரிகள் குடைகளை பிடித்துக் கொண்டு சென்றனர்.

பலர் தாகத்தை தணிக்க குளிர்பான கடைகளுக்கும், பழக்கடைகளுக்கும் படையெடுத்தனர். இதனால் அங்கு வியாபாரம் களைகட்டியது. இதுதவிர தர்பூசணி, வெள்ளரிக்காய் விற்பனையும் அமோகமாக நடக்கிறது.

வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் கோடைகால நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.எனவே தேவையில்லாமல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இனி வரும் நாட்களில் வெயிலின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News