அமைச்சர் துரைமுருகனின் உறவினர் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

அமைச்சர் துரைமுருகனின் உறவினர் வீட்டின் மாடியில் ஏறி குதித்த அதிகாரிகள் மொத்தமாக ஏழரை லட்சம் ரூபாயை கைப்பற்றினர்

Update: 2024-04-08 06:55 GMT

அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டில் சோதனையிட்ட பறக்கும் படையினர்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியானது ஆங்காங்கே தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தேர்தல் ஆணைய பறக்கும் படை தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன் தினம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறி 4 கோடி ரூபாயை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வேலூர் தொகுதிக்குட்பட்ட கே.வி.குப்பத்தில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகேயுள்ளது காங்குப்பம். இந்த கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் அமைச்சர் துரைமுருகனின் உறவினராவார். இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காங்குப்பம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக நடராஜன் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நள்ளிரவில் அங்கு சென்றனர். அரை மணி நேரமாக கதவை தட்டியபோதும் யாரும் திறக்காததால், அருகில் இருந்த வீட்டின் மாடி வழியாக, நடராஜனின் வீட்டில் ஏறி குதித்தனர்.

அப்போது, மொட்டை மாடியில் கட்டுக் கட்டாக சிதறிக் கிடந்த இரண்டரை லட்சம் ரூபாயை கைப்பற்றினர். இதையடுத்து, மொட்டைமாடியின் கதவை உடைத்த அதிகாரிகள், வீட்டுக்குள் இறங்கியதைக் கண்டு, நடராஜனின் மனைவி கூச்சலிட்டு வாக்குவாதம் செய்தார்.

பின்னர், வீட்டை முழுமையாக சோதனையிட்ட அதிகாரிகள், பீரோவில் இருந்த 5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வீட்டில் இருந்த நடராஜன் - விமலா ஆகிய தம்பதியரிடம் மேற்கொண்டு விசாரணையில் இது தங்கள் சொந்த பணம் என தெரிவித்துள்ளனர். ஆனாலும் கைபற்றப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் 7 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை கே.வி.குப்பம் வட்டாட்சியரிடத்தில் ஒப்படைத்தனர்.

அதே நேரத்தில் இந்த பணம் வாக்காளர்களுக்காக கொடுப்பதற்காக மறைத்து வைத்துள்ள பணம் என கூறப்படுகிறது. மொத்தமாக ஏழரை லட்சம் ரூபாயை கைப்பற்றிய அதிகாரிகள், பணப்பட்டுவாடா நடைபெற்றதா என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News