வேலூரில் சிரஞ்சில் கிரீம் சாக்லெட் விற்ற கும்பலை பிடிக்க நடவடிக்கை கலெக்டர் உத்தரவு
வேலூரில் குழந்தைகள் உயிருடன் விளையாட்டு சிரஞ்சில் அடைத்து கிரீம் சாக்லெட் விற்ற கும்பலை பிடிக்க நடவடிக்கை கலெக்டர் உத்தரவு மாநகராட்சி அலுவலர்கள் சோதனை
வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி பகுதியில் குழந்தைகளின் உயிரை பறிக்கும் வகையில், பயன்படுத்தப்பட்ட சிரஞ்சில் கிரீம் சாக்லெட் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று உத்தர விட்டுள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களில் சாக்லெட்டும் ஒன்று. இது பல்வேறு வகைகளில் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனைக்காக பல்வேறு விதமான கவர்ச்சிகரமாக பேக்கிங் செய்யப்படுகிறது. ஆனால் இதை எல்லாம் மிஞ்சும் வகையில் வேலூரில் பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகளில் சாக்லெட் விற்பனை அதிகரித்துள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி பகுதி 2ல் உள்ள சில கடைகளில் குழந்தைகளை கவரும் வகையில் புது விதமான சாக்லெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதாவது நோயாளிகளுக்கு பயன்படுத்திவிட்டு வீசி எறிந்த சிரஞ்சுகளை சேகரித்து அதில் கிரீம் சாக்லெட் அடைத்து கடைகளுக்கு அனுப்பியுள்ளனர். இது ரூபாய் 5 , 10 என்ற விலையில் விற் பனை செய்யப்படுகிறது . இந்த சிரஞ்சு சாக்லெட்டுகள் தற்போது வேலூர், சத்துவாச்சாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எல்லா கடைகளிலும் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சாக்லெட்டுகளை அப்பகுதிகளில் உள்ள குழந்தைகள் விரும்பி அதிகளவில் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர் . இவ்வாறு சாக்லெட் அடைக்க பயன்படும் சிரஞ்சுகள் மிகவும் பழைய, அழுக்கு படிந்த நிலையில் உள்ளது . இந்த சிரஞ்சுகள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு கழிவுகளுடன் வீசப்படும் சிரஞ்சுகள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே இந்த சிரஞ்சு சாக்லெட் மூலம் ஏற்படும் ஆபத்தையும் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் விபரீதத்தை தடுக்க சிரஞ்சுகளில் அடைத்து சாக்லெட் விற்பனை செய்யும் கும்பல் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் உயிரிழந்துள்ளனர். இந்தநேரத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தில் இவ்வாறு செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம் என்றும் தெரிவித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் இன்று கேட்டபோது, சிரஞ்சில் அடைத்து விற்பனை செய்யப்படும் சாக்லெட் தொடர்பாக உடனடியாக ஆய்வு செய்யும்படி மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தவறு செய்த நபர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியில் உள்ள கடைகளில் மாநகராட்சி நகர்நல அலுவலர் சித்ரசேனா தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சிரஞ்சு சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையிட்டனர். தொடர்ந்து காகிதப்பட்டறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் 15க்கும் மேற்பட்ட சிரஞ்சு சாக்லெட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடைக்காரரிடம் விசாரணை நடத்தியதில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒருவர் வந்து விற்பனை செய்தார் . ஆனால் அவர் எங்கிருந்து வந்தார், இது எங்கு தயாரிக்கப்படுகிறது என்பது எனக்கு தெரியாது என்று கூறினார். உடனடியாக அந்த சிரஞ்சு சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கடைக்காரர்கள் பில்டர்பெட் ரோட்டில் உள்ள ஒரு கடையில் இந்தசிரஞ்சு சாக்லெட்டுகள் விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த கடையை கண்டு பிடிக்க அந்த பகுதியில் சோதனையிட்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த சிரஞ்சு சாக்லெட்டுகள் உணவு தர பரிசோதனை கூடத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளதாக மாநகர் நல அலுவலர் சித்ர சேனா தெரிவித்தார்