மலை கிராமத்திற்கு தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்
தெள்ளை மலை கிராமத்திற்கு ரூ.11.50 கோடியில் தார்சாலை அமைக்கும் பணியை ஆட்சியர் மற்றும் நந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இது மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் அவசர சிகிச்சைக்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வ வேண்டும்.
பிரசவ காலத்தில் பெண்களும் அவ்வாறே நடந்து சென்று வருவதாகவும், முடியாத நேரத்தில் டோலி கட்டி மருத்துவ மனைக்கு தூக்கி செல்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த ஊரை சேர்ந்தவர்கள் வெளியிடங்களில் இறந்துவிட்டால் அவரது உடலை கூட டோலி கட்டிதான் மலைகிராமத்திற்கு சுமந்து செல்கின்றனர். மேலும் பிரசவத்திற்காக டோலி கட்டி அழைத்துச் செல்லும்போது உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது. கிராமத்திற்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால் கிராமத்திற்கு வாகனம் செல்ல முடியாத சூழல் உள்ளது.
துத்திக்காடு கிராமத்தில் இருந்து தெள்ளை மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் 10 இடத்தில் காட்டாறுகள் செல்கிறது. ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு கிராம மக்கள் தலைமீது சுமந்தபடியே ஆற்றை கடந்து மலை பகுதிக்கு நடைபயணமாக செல்கின்றனர்.
தொடர் மழையின் காரணமாக தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால், மலை கிராம மக்கள் மிகவும் சிரமத்துடன் ஆற்றை கடந்து செல்கின்றனர்.
சுமார் 7 கிலோமிட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளது. கிராமத்திற்கு செல்லும் சாலையில் தெரு விளக்குகள் கூட இல்லை. இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி செல்கின்றனர்.
இந்நிலையில் துத்திக்காடு முதல் தெள்ளை மலை கிராமம் வரை சாலை அமைத்துக்கொள்ள வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தெள்ளை மலை கிராமம் வரை ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சாலை இன்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, துணை ஆட்சியர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாபு வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார், மாவட்ட வன அலுவலர் கலாநிதிஆகியோர் கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
இதில் பென்னாத்தூர் பேரூராட்சி செயலாளர் அருள்நாதன், பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார், தாசில்தார் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.