புதிய கல்விக் கொள்கையால் மாநில உரிமைகள் பறிப்பு.. தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு..
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:
வேலூர் மாநகர் வசந்தபுரம் பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்களை இந்திய ரயில்வே துறையினர் அது ரயில்வே இடம் என்றும் ஆக்கிரமிப்பில் உள்ளீர்கள் என்றும் கூறி அவர்களை காலி செய்து வருகின்றனர். இது முற்றிலுமாக மக்கள் விரோதப் போக்கு ஆகும். அதை கைவிட்டு அவர்களுடைய வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும்.
பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பது பொதுவான இடஒதுக்கீடு அல்ல. விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கக்கூடிய இட ஒதுக்கீடு என்பது சமூக கோட்பாட்டுக்குரியது. சமூக நீதி என்பது ஏழை பணக்காரர்கள் என்ற கோட்பாடு அல்ல. எல்லா துறைகளிலும் 80 சதவீதத்திற்கு மேல் ஆதிக்கம் செய்யக்கூடிய சமூகத்தினர் உள்ளனர். இது ஊர் அறிந்த உலகம் அறிந்த உண்மை.
நீதிபதிகள், துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், அரசு உயர் அதிகாரிகள் என முக்கியப் பதவிகளில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை உயர் சாதி மக்கள் தான் உள்ளனர். 10 சதவீத இட ஒதுக்கீட்டில் உள்நோக்கம் உள்ளது. அதனால்தான் நாங்கள் விமர்சிக்கிறோம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை ஆகி உள்ள நபர்களை உச்ச நீதிமன்றமே விடுதலை செய்துள்ளது. சட்டத்தின் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் இதை கையாண்டு உள்ளது. மேலும், ஆளுநரின் தாமதத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள். குறிப்பாக ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் ஒரே நிலைப்பாட்டை தான் எடுக்கும்.
பாரதிய ஜனதா கட்சியைப் பார்த்து திமுக பயப்படுகிறது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள கருத்து வேடிக்கையாக உள்ளது. அதிமுகவை பார்த்து திமுக பயப்படுகிறது என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் என்று அர்த்தம். அதைவிடுத்து பாஜகவை பார்த்து திமுக பயப்படுகிறது என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் குரலாகவே மாறிவிட்டார் என்பது தான் அர்த்தம்.
புதிய கல்விக் கொள்கையினால் மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. அதனை மூடி மறைக்க ஆளுநர் தமிழிசை முயற்சிக்கிறார். காஷ்மீர் பைல்ஸ் போன்ற படங்கள் வருவதினால் மக்கள் விரோதப் போக்கு ஏற்படும். சிறுபான்மை மக்களுக்கு எதிராக எடுக்கும் படங்கள் மூலம் சங்பரிவார்கள் அரசியல் ஆதாயம் தேட திட்டம் தீட்டி உள்ளனர் என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.