வேலூர் பெரியார் பூங்காவில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட பெண் தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் பெரியார் பூங்கா கார் நிறுத்துமிடத்தில் நேற்றிரவு பெண் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் விழுந்து கிடந்ததை பார்த்த பொது மக்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் மயங்கி கிடந்த பெண்ணை மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தலையில் வெட்டு காயங்களுடன் இருந்தவர் லத்தேரியை அடுத்த தொண்டான்துளதி பகுதியை சேர்ந்த மணவாளன் என்பவரின் மனைவி கீதா(40) என்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர் கீதா யாரால் எதற்காக தாக்கப்பட்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் சோதனையிட்டு வருகின்றனர்.