வேலூர்: பளுதூக்கும் போட்டியை ஆட்சியர் துவக்கி வைத்தார்
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க மாநில அளவிலான அணியை தேர்வு செய்யும் போட்டிகளை, வேலூர் பளுதூக்கும் பயிற்ச்சி மையத்தில் துவக்கிவைத்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற மார்ச் 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறும் 73 வது தேசிய சீனியர் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க இருக்கும் தமிழக அணியை தேர்வு செய்வதற்காக பளுதூக்கும் வீரர்-வீராங்கனைகள் தேர்வு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பளுதூக்கும் மையத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியினை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் துவக்கிவைத்தார். பின்னர் அவர் பேசுகையில் வேலூர் மாவட்டம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட மாவட்டமாகும். வேலூர் மாவட்டத்தில் 35 ஆயிரம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் தற்போது 25 ஆயிரம் ராணுவ வீரர்களும் பணியாற்றி வருகின்ற பெருமைக்குரியதாகும். அதேபோல் பளுதூக்கும் போட்டியிலும் சர்வதேச, தேசிய, மாநில அளவில் பங்குபெற்று பதக்கங்களை வென்றுள்ளது பெருமைக்குறியது என்றும் பேசினார்.