கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் - கே.எஸ்.அழகிரி

வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி எதிரிகள் பல்வேறு பிரச்சாரங்களை முன்வைத்தாலும் அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் வெற்றி என்ற இலக்குடன் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி வேலூரில் பேசினார்.;

Update: 2020-12-28 18:38 GMT

வேலூரில் நேற்று (28-12-2020) மாலை காங்கிரஸ் கட்சியின் 136 ஆண்டு துவக்க விழா மற்றும் விவசாயிகள் சங்க மாநில மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேசியதாவது :

தமிழகத்தில் 2 அல்லது 3 மாதத்தில் தேர்தல் வருகிறது. இதில் தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டு தலையெழுத்தை மாற்ற காங்கிரஸ் கட்சியினர் பாடுபட வேண்டும். தேர்தல் என்பது ஒரு யுத்தம். இந்த யுத்தமானது இரண்டு கருத்துக்களுக்கும் 2 லட்சியத்திற்கும் இடையே ஏற்படுகின்ற யுத்தம் இதில் வெற்றி பெற வேண்டும். அதற்காக கிராமங்கள்தோறும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். வர உள்ள சட்டமன்ற தேர்தலில் இதைவிட அதிகமான வெற்றிகளை பெற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் நோக்கம் தமிழகத்தில் அதிமுக அரசையும் மத்தியில் பாஜக வையும் தோற்கடிக்க வேண்டும் என்பதே. தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான ஒரு கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது எனவே தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

மத்தியில் பிஜேபி ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொழில் வளர்ச்சியில் பொது துறையும் தனியார் துறையும் என இரண்டு துறைகளுக்கும் அனுமதி அளித்தது. ஆனால் பிஜேபி ஆட்சியில் தனியார்துறைக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. இதனால் பொதுத்துறை நிறுவனங்கள் அழிந்து வரும் சூழ்நிலையில் உள்ளது. வேளாண் சட்டத்தை அதிமுக அரசு ஆதரித்ததால் தங்கள் சுயமரியாதையை இழந்துள்ளார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற சுயமரியாதையுடன் தோழமை கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டால் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அழகிரி கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், டெல்லியில் ஒருமாதமாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இதை கண்டுகொள்ளவில்லை. நேற்று கூட ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார்,  ஆனால் அரசு எதையும் செய்யவில்லை. 6 1/2 ஆண்டு மோடி ஆட்சியில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளோம். 2 கோடி வேலை தருவதாக சொன்னார் ஆனால் தற்போது என்ன வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார் என கேள்வி எழுப்பினார்.

இந்திய பொருளாதாரம் அனைத்திலும் பின்னதங்கி வருகிறது 6 1/2 ஆண்டுகளில் ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட மோடி செய்தது இல்லை. சட்டவிரோத முறையில் வேளாண் சட்ட மசோத நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ஜ.கவை எதிர்த்து நாம் போராட வேண்டும் அது சுலமானது அல்ல எனவும் ஒன்றுமையே வலிமை என்பது தான் காங்கிரஸின் கொள்கை. ஒற்றுமையுடன் நாம் போராட வேண்டும். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என நாடு எதிர்பார்க்கிறது  என்று தினேஷ் குண்டுராவ் பேசினார்.

Similar News