விஜயகாந்த் மறைவு: சரத்குமார், தினகரன், வானதி சீனிவாசன், ஜிகே வாசன் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;

Update: 2023-12-28 04:57 GMT

மறைந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் 

விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும்

இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே எனும் முழக்கத்தை முன்னிறுத்தி நடிகராக, நடிகர் சங்கத்தலைவராக, அரசியல்வாதியாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனிதாபிமானம் கொண்டவராக கேப்டன் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றென்றும் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும். தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

தேமுதிக தலைவர் அருமைச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன். நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவரது மறைவு தாங்க முடியாத மன வேதனையைத் தருகிறது. தமிழ்நாட்டின் கலாசார தலைநகரான மதுரையில் பிறந்து, திரைத்துறையில் போராடி பெரும் சாதனை படைத்தவர். திரைத்துறையில் அவர் பிடித்த இடம் என்பது யாராலும் நிரப்ப முடியாதது.

தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி 2006-ல் போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 8 சதவீத வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2006 உள்ளாட்சித் தேர்தல், 2009 மக்களவைத் தேர்தலில் தேமுதிக 10 சதவீத வாக்குகளைத் தாண்டியது. அதன் பிறகு 2016 சட்டமன்றத் தேர்தல் வரை தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பிரதான கட்சிகள் போட்டி போடும் நிலை ஏற்பட்டது. உடல்நலப் பாதிப்பு காரணமாக அரசியலில் அவர் எட்ட வேண்டிய உயரத்தை எட்ட முடியவில்லை.

தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டிருந்தாலும் திரைத் துறையிலும், அரசியலிலும் அவர் ஒரு பெரும் சகாப்தம் என்பதில் சந்தேகம் இல்லை. விஜயகாந்த் அவர்கள் மறைவால் வாடும் அவரது மனைவி தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா, மகன்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது.

அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும், தேமுதிக கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களின் திடீர் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனவே இன்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. விஜயகாந்தை இழந்து வாடும் குடும்பத்தினர், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News