வைணவ கோவில்களுக்கு புரட்டாசி மாதம் ஆன்மீக சுற்றுலா: எவ்வாறு பதிவு செய்வது?

சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து புரட்டாசி மாதம் பக்தர்கள் வைணவ கோவில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-18 11:11 GMT
வைணவ கோவில்களுக்கு புரட்டாசி மாதம் ஆன்மீக சுற்றுலா:  எவ்வாறு பதிவு செய்வது?
  • whatsapp icon

அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-2023-ம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவத் கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத் துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக கடந்த ஆடி மாதம் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, புரட்டாசி மாதம் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு வைணவ கோவில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீரராகவபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புத்தூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு 2-வது பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

திருச்சியிலிருந்து உறையூர் அழகிய மணவாள பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், உத்தமர்கோவில், புருஷோத்தம பெருமாள் கோவில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசல பெருமாள் கோவில், தான்தோன்றி மலை கல்யாண வெங்கடராம பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

தஞ்சாவூரிலிருந்து திரு கண்டியூர் சாபவிமோச்சன பெருமாள் கோவில், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோவில், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் பெருமாள் கோவில், நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில், திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில், வடுவூர் கோதண்டராம சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

மதுரையிலிருந்து கள்ளழகர் கோவில், ஒத்தகடை ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோவில், திருமோகூர் காளமேக பெருமாள் கோவில், திருகோஷ்டியூர் சௌம்ய நாராயண பெருமாள் கோவில், மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த ஆன்மிகச் சுற்றுலாவானது பக்தர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். இந்த ஆன்மிகச் சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

மேலும், இது தொடர்பாக விவரங்களுக்கு www. ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணைய தளத்திலும், 044 25333333, 25333444 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News