போக்குவரத்து கழக காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும்
ஓய்வு பெற்றவர்களை பணிக்கு அழைப்பதற்கு ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது
போக்குவரத்து கழக காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும். ஓய்வு பெற்றவர்களை பணிக்கு அழைப்பதற்கு ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாக குழு கூட்டம் தஞ்சை மாவட்ட அலுவலகத்தில் துணை பொதுச் செயலாளர் எம்.வெங்கட பிரசாத் தலைமையில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மத்திய, மாநில குழு முடிவுகள் பற்றியும், போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன் தொழிலாளர்கள் நிலை பற்றியும் விரிவாக பேசினார்கள்.
கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, ஓய்வு பெற்றோர் சங்க பொருளாளர் எஸ்.பாலசுப்பிர மணியன், நிர்வாகிகள் அ.சுப்பிரமணியன், கே.சுந்தர பாண்டியன், டி.தங்கராசு, பி.குணசேகரன் அ.இருதயராஜ், எஸ். ஞானசேகரன் டி.ரெஜினால்டு ரவீந்திரன்,
கும்பகோணம் சங்க பொதுச் செயலாளர் எஸ். தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்,நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட நிரந்தர காலி பணியிடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் பணிக்கு ஆள் எடுப்பதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், தற்போது போக்குவரத்து கழக நிர்வாகங்கள் ஓய்வு பெற்ற ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட பணியாளர்களை தற்காலிகமாக பணி பார்க்க அழைப்பு விடுத்துள்ளதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
வேலைவாய்ப்பற்ற நிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கும் நிலையில் நிரந்தர காலி பணியிடங்களில் நேரடி நியமனம் மூலம் நிரப்பாமல், அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க மறுப்பதை தமிழ்நாடு அரசும்,போக்குவரத்து கழக நிர்வாகம் கைவிட கேட்டுக்கொள்கிறது.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கடந்த 2015 ஜூலை மாதம் முதல் மறுக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிட்டும் வழங்கவில்லை, இக்கோரிக்கையில் தீர்வு காண சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் துணை ஆணையருக்கு, ஏஐடியூசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் கடிதம் கொடுத்துள்ள அடிப்படையில், அகவிலைப்படி உயர்வு கோரிக்கையில் உரிய தீர்வு காண தமிழ்நாடு அரசும், கழக நிர்வாகங்களும் முன் வர வேண்டும்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிப்பது, விரைவு போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் துணைவியாருடன் பயணிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை 18ஆம் தேதி சென்னை பல்லவன் இல்லம் முன்பாக நடைபெறும் மாநிலம் தழுவிய தர்ணா ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றவர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க இக் கூட்டத்தின் வாயிலாக அழைப்பு விடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.