ஆவினில் ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்கள்: ஒப்பந்தம் ரத்து

வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-06-08 11:00 GMT

பைல் படம்.

வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் பால் அலுவலகம் இயங்கி வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படும் பால் இங்கிருந்துதான் பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பால்பாக்கெட்டுகளை எடுத்துச் செல்வதற்காக ஒரே பதிவு எண் கொண்ட 2 வாகனங்கள் ஆவின் அலுவலகத்திற்கு வந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆவின் பொது மேலாளர் சுந்தரவடிவேலு, 2 வாகனங்களையும் ஆய்வு செய்து, அதில் ஒரு வாகனம் போலியானது என்பதை கண்டறிந்தார். பின்னர் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஆவின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து, ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்கள் இயக்கப்பட்டதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2500 லிட்டர் என பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதுகுறித்து ஆவின் நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனம் இயக்கப்பட்டது குறித்து வேலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளின் விசாரணையை தொடர்ந்த அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தனர். மேலும் இந்த சமபவம் தொடர்பாக வேலூர் சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வேலூர் ஆவின் நிர்வாகத்தில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்களை இயக்கி வந்த சிவக்குமார், தினேஷ் ஆகிய இருவரது வாகனத்தின் ஒப்பந்தத்தை ஆவின் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மேலும், வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கிய விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு செக்யூரிட்டி ஏஜென்சி உரிமையாளர் கோபாலுக்கு ஆவின் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கண்காணிக்க தவறியதால் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என ஏஜென்சிக்கு கேள்வி எழுப்பியுள்ள வேலூர் ஆவின் நிர்வாகம், விளக்கம் அளித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News