சீன பெண்தமிழறிஞருக்கு தமிழகத்தில் பாராட்டுவிழா..!
சீன பெண்தமிழறிஞருக்கு தமிழகத்தில் பாராட்டுவிழா நடைபெறுகிறது. இதை நேரலையில் காணலாம்.;
சீன பெண்தமிழறிஞருக்கு தமிழகத்தில் பாராட்டுவிழா நிறைமதி (Zhang Qi), தமிழகத்தில் பயணம் செய்து தமிழர்களின் பண்பாடு குறித்து ஒரு நூலை எழுதியுள்ளார்.
தமிழகத்தின் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆர்ட் ஆப் கிவ்விங் அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் Dr. இராமசாமி ராஜேஷ் குமார், இவர் சீனாவின் ஜேஜியாங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர் இந்த நூலின் பதிப்பாசிரியர் ஆவார். சிறப்பாக வடிவமைத்து அழகாக அச்சிட்டுள்ளார்.
சீனப்பெண் ஜாங் கீ (Zhang Qi) தமிழ் மீது ஈடுபாடு கொண்டவர்.அதனால் தனது பெயரை நிறைமதி என்று தமிழில் மாற்றிக்கொண்டவர். தமிழ் அழகாக பேச எழுத தெரிந்தவர். தமிழகத்தின் பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு தமிழர்களின் பண்பாடு மற்றும் தமிழின் சிறப்புகளை தனது நூலில் அழகாக பதிவும் செய்துள்ளார்.
நிறைமதி (Zhang Qi) 1989ம் ஆண்டில் சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பிறந்து பூசியான் மாகாணத்தில் வளர்ந்தார். பெய்ஜிங்கிலுள்ள தகவல் தொடர்புப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ் பட்டம் பெற்றார். ஹாங்காங்கின் சைனீஸ் யூனிவர்சிட்டி ஆஃப் ஹாங்காங்கில் சர்வதேச அரசியல் பொருளாதாரம் எனும் முதுகலைப் பட்டம் பெற்றார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் இரண்டு ஆண்டுகளாக பணி புரிந்தார். தற்போது சீனாவின் யுன்னான் மிஞ்சூப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையின் தலைவராக உள்ளார். இவர் சீனாவில் தமிழ் பாடநூல் எழுதி வெளியிடுதல், தமிழர் பண்பாட்டைச் சீனர்களுக்கு அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.
இவரின் பணியை பாராட்டி "தமிழ் முழக்கப் பேரவை" தமிழகத்தின் திருநெல்வேலியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சைவ சபையில் பிப்ரவரி 12ஆம் தேதி பாராட்டு விழா நடத்துகிறது. பாராட்டு விழாவில் அந்த புத்தகத்தை வெளியீடு செய்கிறார்கள். இந்த நிகழ்வுகளை தமிழக இணைய ஊடகமான இன்ஸ்டாநியூஸ் (www.instanews.city) முன்னெடுத்துச் செல்கிறது.
இந்த விழாவிற்கு பப்புவா நியூ கினி (Papua New Guinea) நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல் இணைய வழியில் தலைமை தாங்கி சிறப்பு செய்கிறார். தமிழ் முழக்கப் பேரவை அமைப்பாளர் தேசிய நல்லாசிரியர் முனைவர். சு.செல்லப்பா நேரில் முன்னிலை வகிக்கிறார்.
- பொது அறுவை சிகிச்சை நிபுணரும் எழுத்தாளருமான பேராசிரியர், டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன் புத்தகத்தை வெளியிடுகிறார்.
- மனோன்மணியம்சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் Dr. சுதாகர் புத்தக அறிமுக உரை செய்கிறார்.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் Dr. N.கிருஷ்ணன் புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
நோய்த்தொற்று காலத்தை கவனத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி நிகழ்ச்சி நடைபெறுவதால், இந்நிகழ்வில் குறிப்பிட்ட தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மட்டும் நேரில் கலந்து கொள்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளில் இருந்தும் தமிழறிஞர்கள், கலைஞர்கள் இணைய வழியில் பங்கேற்று பேச உள்ளனர்.
இந்த நிகழ்வினை www.instanews.city செய்திதளத்தின் youtube ல் அன்று நேரலையில் காணலாம்.