தக்காளி கிலோ ரூ.20க்கு விற்பனை: ஒரே நாளில் ஓசூருக்கு வந்த 200 டன்
ஓசூருக்கு வெளிமாநிலங்களிலிருந்து ஒரே நாளில் 200 டன் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டதால் இருமடங்கு விலை சரிவடைந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தக்காளி செடிகள், காய்கள் சேதமடைந்துள்ளன. இதனால், தக்காளியின் வரத்து குறைந்து விலை கிடுகிடுவென உயர்ந்து. ஓசூர் காய்கறி சந்தையில் ஒரு கிலோ முதல் ரக தாக்களி 110 ரூபியக்கும், இரண்டாவது ரகை தக்காளி ரூ. 90-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, சட்டீஸ்கர் ராயப்பூர் ஆகிய வெளி மாநிலங்களிலிருந்து இருந்து இன்று ஒரே நாளில் 200 டன் தக்காளி லாரிகள் மூலம் ஓசூர் பத்தலப்பள்ளி தக்காளி கமிஷன் மண்டிக்கு வந்துள்ளது.
இதனால் யாரும் எதிர்பாராத வகையில் தக்காளி விலை இருமடங்கு சரிந்து மண்டியில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், இரண்டாவது ரகை தக்காளி ஒரு கிலோ ரூபாய்15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் பொதுமக்களுக்கு சந்தைகளில் நேரடியாக சில்லறை விற்பனையில் முதல் ரக தக்காளி 60 முதல் 70 ரூபாய்க்கும், இரண்டாவது ரகை 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளை தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதுகுறித்து தக்காளி கமிஷன் மண்டி விற்பனையாளர்கள் கூறுகையில், கடந்த வாரம் 25 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இன்று வெளி மாநிலங்களில் இருந்து தாக்களி வர துவங்கியதால் யாரும் எதிர்பாராத விதமாக தக்காளி விலை சரிந்து 25 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.