தக்காளி திருடர்கள் ஜாக்கிரதை..! விவசாயிகளே உஷார்..!

தக்காளி வாங்கிக்கொண்டு செல்போனை பார்த்தபடி வராதீர்கள். அப்புறம் வீட்டுக்குப்போய் மனைவியிடம் கிடைக்கும் விடைகளை அலுவலகத்தில் சொல்லி வருத்தப்படணும்.

Update: 2023-07-07 13:51 GMT

தங்கத்தில் நகை அணிவதற்குப் பதிலாக தக்காளியில் நகைகள் அணிந்துள்ள மணப்பெண்.(கோப்பு படம்)

தக்காளி விலை ரூ.150ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தக்காளிக்கு விலை இல்லை என்று விவசாயிகளே சாலையில் கொட்டிவிட்டுச் சென்ற காலமும் உண்டு. ஆனால் இப்போது எல்லாமே தலைகீழ். தக்காளி இன்று விவசாயிகளின் பொன் முட்டையிடும் வாத்து.

ஆமாங்க, தக்காளி தங்கமாகிப்போனது. இன்று Talk of the country தக்காளி..தக்காளி..தக்காளி. அட ஆமாங்க குழம்பிலேதான் தக்காளியைக் காணோம் செய்தியிலாவது மூணுதடவை சொல்லிப் பாப்போம்னுதான் தக்காளி தக்காளி தக்காளின்னு சொல்லிப்பார்க்கிறேன்.

தக்காளி விலை இப்போதைக்கு குறையிர மாதிரி தெரியல. அது இபிஎஸ்- ஓபிஎஸ் அணிகள் இணைப்பு போல நீளும் போல இருக்கு. போற போக்கைப்பார்த்தா மணிமேகலை பிரசுரம் தக்காளி இல்லாமல் சாம்பார், குழம்பு என பல வகை உணவு தயாரிப்பது எப்படி? என்று ஒரு புத்தகம் போடலாம்ங்க. உண்மையிலேயே அது விற்பனையில் சக்கைப்போடு போடும்.


மணிமேகலை பிரசுரம் எனது யோசனைக்கு ஹானரோரியம் தரணும். அவங்க பாட்டுக்கு புத்தகத்தை போட்டு சம்பாதிச்சிட்டா ஐடியா கொடுத்த நான் சும்மா இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க?

சரி சரி .. தக்காளி மேட்டருக்கு வருவோம். ஒரு காலத்தில் வெங்காய அரசியல் பிரபலம். இப்போது தக்காளி அரசியல் பிரபலமாகி வருகிறது. சமூக வலை தளங்களை திறந்தால் தக்காளி பற்றிய செய்திகள், துணுக்குகள், மீம்ஸ்கள் ஏராளமாக வலம் வருகின்றன.

தங்கத்தை பெட்டிக்குள் வைத்து பூட்டிய காலம் போய், வீட்டில் இருக்கிற முக்கிய ஆவணங்களையெல்லாம் வங்கியில் கொடுத்து, ஒரே ஒரு தக்காளியை வாங்கி வந்து லாக்கரில் வைத்துப்பூட்டியதாக குறும்படங்களும் வந்தாச்சு.

அந்த தக்காளியைக்கூட நம்ம காங்கிரஸ் தலைவர் ராகுல் திருமணம் செய்தால்தான் எடுப்பேன் என்கிற பிடிவாதத்துடன் பீரோ லாக்கரில் பத்திரமாக இருக்கிறது.(அழுகிப்போய்விடாதா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது) நானே சொல்லிவிட்டேன் ராகுல் திருமணம் செய்தால்தான் எடுப்பேன் என்ற உறுதியுடன். அவர் எப்போ கல்யாணம் பண்றது? தக்காளி எப்போ வெளியே வருவது? அதுக்குள்ள தக்காளி விலையே குறைஞ்சிப்போய்டும்.


இப்படியான காலகட்டத்துல நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்ங்க. தக்காளி வாங்க பொதுவாகவே தனியாக போகாதீங்க. முடிஞ்சா பக்கத்து வீட்டு பாமா அக்காவை துணைக்கு கூட்டிப்போங்க. தக்காளி வாங்கியதும் வெளியே தெரியாதவாறு பத்திரப்படுத்துங்கள். யாராவது உங்களை பின்தொடர்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இதற்கு முன்பு உங்களின் 10 பவுன் தங்கச் செயினை பத்திரப்படுத்தியது போல் பத்திரமாக வீட்டுக்கு கொண்டு வந்து சேருங்கள். தக்காளி திருடர்கள் இருக்கிறார்கள், ஜாக்கிரதை. பேருந்தில் தக்காளி எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.( தக்காளி திருடர்கள் மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து இருப்பதால் போலீசார் இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்) (இதுவும் வெறும் நகைச்சுவைக்காகத்தான் ) ( அப்புறம் பொய்யான தகவல் பரப்புறேன்னு என்னைய பிடிச்சிட்டா)

சரிங்க பெங்களூர்ல ஹாசன் மாவட்டத்துல ஒரு விவசாயி தோட்டத்தில ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை ராவோடு ராவா பறிச்சிக்கிட்டு போய்ட்டாங்களாம். பருவ மழை காரணமாத்தான் தக்காளி விலை தாறுமாறா உயர்ந்திருக்கு. பருவகால திருடர்கள் பருவத்தை பயன்படுத்தி லட்சங்களில் திருடிவிட்டார்கள். அதனால் தமிழ்நாட்டில் தக்காளி பயிரிட்டிருக்கும் விவசாயிகள் ஜாக்கிரதையா இருங்க.

கம்பெடுத்துக்கிட்டு ராக்காவல் இருங்க. அப்பதான் இருக்கற கொஞ்சம் தக்காளியையாவது காவந்து பண்ணமுடியும். ஜாக்கிரதை..ஜாக்கிரதை.. தக்காளி திருடர்கள் ஜாக்கிரதை..பாத்தீங்களா..இந்த செய்தியில் எத்தனை தக்காளி பயன்படுத்திட்டேன். ஆனா ஏட்டுத் தக்காளி கறிக்கு உதவாதாமே..?! (வடிவேல் முழிப்பது போல முழிக்கிறேன்)

Tags:    

Similar News