முட்டை விலை சரிவைத்தடுக்க முதிர்ந்த 1 கோடி கோழிகளை விற்க வேண்டும்

முட்டை விலை சரிவைத்தடுக்க முதிர்ந்த 1 கோடி கோழிகளை விற்பனை செய்ய வேண்டும் என்று பண்ணையாளர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.

Update: 2022-03-16 06:45 GMT

நாமக்கல்லில், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பில், சர்வதேச தரத்திலான கோழித்தீவன பகுப்பாய்வு மையத்தை என்இசிசி மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார்.

நாமக்கல்:

கோழி முட்டை விலை சரிவவை தடுக்க, பண்ணைகளில் உள்ள வயது முதிர்ந்த சுமார் 1 கோடி கோழிகளை விற்பனை செய்ய பண்ணையாளர்கள் முன்வர வேண்டும் என்று சங்கத்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க அலுவலகத்தில் சர்வதேச தரத்திலான கோழித்தவன பகுப்பாய்வு மையம் திறப்பு விழா மற்றும் கோழி, முட்டை விற்பனை நிலையம் தொடக்கவிழா நடைபெற்றது. மண்டல என்இசிசி தலைவர் டாக்டர் செல்வராஜ் ஆய்வு மையத்தை திறந்து வைத்து, முட்டை விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சிங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தரமான கோழித்தீவனம் அளித்தால் மட்டுமே கோழிகளை நோய் தாக்காமல், அதிக முட்டைகளை இடும். எனவே, தரமான கோழித்தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை தரப்பரிசோதனை செய்த பின்பே அதை பயன்படுத்த வேண்டும். இதற்காக சங்கத்தின் சார்பில் சர்வதேச தரத்திலான தீவன மூலப்பொருட்கள் மற்றும் தீவனம் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் சந்திரசேகரன் மேற்பார்வையில், இந்த மையம் இயங்குகிறது. இங்கு பண்ணையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மிகத்துல்லியமாக பரிசோதனை செய்து முடிவுகள் தெரிவிக்கப்படும்.

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகிறது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 5.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த ஒரு ஆண்டாக தீவன மூலப்பொருட்களான மக்காச்சோளம், சோயா புண்ணாக்கு உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்து தீவன உற்பத்தி செலவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் முட்டையின் விலை குறைந்துகொண்டே வருகிறது. இதனால் பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

கோடைகாலம் துவங்க உள்ள நிலையில் கோழிகளுக்கு அயர்ச்சி ஏற்பட்டு முட்டை உற்பத்தி குறையும், அதே நேரத்தில் முட்டை விற்பனையும் குறையும் அபாயம் உள்ளது. வயது முதிர்ந்த கோழிகளை பண்ணைகளில் தொடர்ந்து வளர்த்தால் மேலும் நஷ்டம் அதிகரிக்கும். எனவே, பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் 80 வாரங்களுக்கு மேல் வயது முதிர்ந்த கோழிகளை விற்பனை செய்வது சிறந்தது. பண்ணைகளில் உள்ள, சுமார் 1 கோடி வயது முதிர்ந்த கோழிகளை விற்பனை செய்வதன் மூலம் முட்டை உற்பத்தியைக் குறைத்து முட்டைக்கு நல்ல விலை பெற முடியும். பண்ணையாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் குறைக்கலாம் என்று கூறினார்.

சங்க செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ, துணைத்தலைவர்கள் கீ.நாகராஜன், சண்முகம், துணைச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் சசிக்குமார், முட்டை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஆனந்தன், கோழிப்பண்ணை அதிபர்கள் ராஜேந்திரன், துரை, ரவி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News