வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பழங்குடியினர் போராட்டம்
குடியிருக்க வீட்டுமனை பட்டா கேட்டு வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தை பழங்குடியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;
வந்தவாசி தாலுகா அதியங்குப்பம் கிராமத்தில் குடியிருக்க இடம், வீட்டுமனை பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சரவணன் தலைமையில் திரண்டு வந்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத்தலைவர் செல்வன் தலைமை தாங்கினார்.
அதியங்குப்பம் கிராமத்தில் பழங்குடியினர், வன்னியர், இஸ்லாமியர் என 12 குடும்பத்தினர் 20 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் குடியிருக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு தொடர்ந்து பல ஆண்டுகளாக வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் எனப் பலருக்கு மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் திடீரென வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் வந்து அங்குள்ள குடியிருப்புகளை இடிக்க முயன்ற போது, மலைவாழ் மக்கள் சங்கத்தினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது வருவாய்த்துறையினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தகுதியான வாழ்விடத்தை ஒதுக்கிய பின், தற்போதைய இடத்தை காலி செய்து விடுகிறோம், என்றனர். ஆனால் வேறு இடம் தேடும் நடவடிக்கையில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, திடீரென வருவாய்த்துறையினர் குடியிருப்புகளை இடிக்க வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியிருக்க இடம் கேட்டும், தகுதியான இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தியும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் இன்று காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணிவரை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் ஒருவர் ஒரு பெரிய சாரை பாம்பை பிடித்து கழுத்தில் போட்டு வந்தார். தாலுகா அலுவலக வளாகத்துக்குள் நுழைய முயன்றபோது போலீசார் பேரிகார்டுகளை குறுக்கே வைத்து தடுத்தனர். அதை மீறி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றபோது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
வட்டாட்சியர், வந்தவாசி துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இன்னும் இரு வாரங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், வந்தவாசி தாலுகாவில் பழங்குடியினரை பட்டா வழங்கும் வரை அச்சுறுத்த மாட்டோம், என உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.