மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 6 பவுன் தங்க நகை திருட்டு
வந்தவாசியில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 6 பவுன் தங்க நகைகளை திருடிய தந்தை மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
வந்தவாசியில் மூதாட்டியை காரில் அழைத்துச்சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தங்க நகையை திருடிச் சென்ற தந்தை மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி - திண்டிவனம் சாலையில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் அலமேலு, வயது 60. இவர் கடந்த கடந்த மாதம் மேல்மருவத்தூர் செல்வதற்காக புதிய பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 3 பேர் அலமேலு விடும் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் மேல்மருவத்தூர் இறக்கி விடுவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்றனர்.
அப்போது அவர்கள் கொடுத்த மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அருந்திய அலமேலு மயங்கினார். இதையடுத்து அவர்கள், அவரிடமிருந்து 6 பவுன் தங்க நகையை திருடிய மூன்று பேரும் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அலமேலுவை மயங்கிய நிலையில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். பின்னர் மயக்கம் தெளிந்த அலமேலுவை பெரியபாளையம் போலீசார் வந்தவாசிக்கு அனுப்பி வைத்தனர்,
இதுகுறித்து அலமேலு அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வெளியிட்டு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த விஜயகுமார், அவருடைய தந்தை மற்றும் உறவினர் ஆகியோர் அலமேலுவை காரில் ஏற்றிச் சென்று மயக்க மருந்து கொடுத்து தங்க நகையை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த வந்தவாசி தெற்கு போலீசார் அவர்களிடம் இருந்து ஆறு பவுன் தங்க நகை, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 3 பேர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.