வந்தவாசி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்
வந்தவாசி அருகே ஆந்திரவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு அரக்கோணம் வழியாக ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடமிருந்து ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. இதை தடுப்பதற்காக கூடுதலாக போலீசார் மற்றும் வருவாய் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டை பகுதியில் ரேசன் அரிசி மினி லாரியில் கடத்திச் செல்வதாக பறக்கும் படை தாசில்தார் இளஞ்செழியனுக்கு தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் சதீஷ், எஸ்.ஐ. மோகன், உதவியாளர் சுரேஷ் ஆகியோருடன் அந்தப் பகுதிக்கு சென்றார். அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய மினி லாரி அரிசி மூட்டைகளுடன் வேகமாக சென்றது. அந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். லாரியை சோதனையிட்டபோது 3.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. மினி லாரி மற்றும் அதிலிருந்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.