போலீசாரை கண்டித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திடீர் மறியல்
வந்தவாசி அருகே விபத்தில் 2 மாணவர்கள் காயமடைந்ததை கண்டித்து பள்ளி மாணவிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முனுசாமி மற்றும் துரை ஆகியோர் கடந்த வாரம் மாலை நேரத்தில் பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராம கூட்டுச்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே பைக்கில் வந்த நபர் ஒருவர் மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த 2 மாணவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முனுசாமி என்ற மாணவன் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாற்றப்பட்டார்.
பின்னர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தும் இதுவரை கீழ்க்கொடுங்காலூர் போலீசார் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை போலீசாரை கண்டித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலவேடு அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.