மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்: முன்னறிவிப்பின்றி மாற்றியதால் பெரும் அவதி

வந்தவாசியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்ற இடத்தை முன்னறிவிப்பின்றி மாற்றியதால் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

Update: 2022-08-12 01:52 GMT

சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படாததால் சிரமத்திற்கு உள்ளான மாற்றுத்திறனாளிகள்.

வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் தேதி நடைபெறும் என திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு பதிலாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த இடம் மாற்றப்பட்டது குறித்து எந்த முன்னறிவிப்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றுத் திறனாளிகள் வரத் தொடங்கினர். அங்கிருந்த போலீசார் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெறுவதாக கூறி அவர்களை திருப்பி அனுப்பினர்.

இதனால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் அவதி அடைந்தனர். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:

நாங்கள் எங்கள் ஊரில் இருந்து பெரும் சிரமப்பட்டு முகாமில் பங்கேற்க வருகிறோம். எங்களால் தனியாக வர இயலாததால் உடன் ஒருவரை அழைத்துக் கொண்டும் வருகிறோம். ஆனால் இங்கு வந்தால் முகாம் நடைபெறும் இடத்தை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றி விட்டதாக தெரிவிக்கின்றனர். எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் இடத்தை மாற்றினால் நாங்கள் என்ன செய்வது.

மீண்டும் இங்கிருந்து நடந்தோ, ஆட்டோவிலோ சுமார்  அரை கிலோமீட்டர்  தூரம் செல்ல வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான மருத்துவப் பரிசோதனைக்கு நாங்கள் வந்தால், எங்களை அலைக்கழித்து அதிகாரிகள் சோதிக்கின்றனர். எங்களை அலைக்கழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் முகாமிலும் சரிவர ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சக்கர நாற்காலி வசதி சரிவர செய்து தரப்படாததால் நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகளை உடன் வந்தவர் சிரமத்துடன் தூக்கிச் செல்லும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து அவர்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கமணியிடம் புகார் கூறினர்.

Tags:    

Similar News