வந்தவாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள், பணம் கொள்ளை
வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள்,பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியை அடுத்துள்ள கம்பன் நகர் பெரியார் வீதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய தம்பி திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருடைய தம்பியை அழைத்து வருவதற்காக கார்த்திக் வீட்டை பூட்டி விட்டு திருப்பூருக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். இதன் பின்னர் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 12 பவுன் தங்க நகைகள்,வெள்ளி நகைகள் மற்றும் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடி தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலையில் கார்த்திக்கின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கைரேகை பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தராஜன் தலைமையில் கைரேகை நிபுணர் விஜயகுமார் திருட்டு நடந்த வீட்டைச் சுற்றியுள்ள தடயங்களை சேகரித்தனர். இதன் அடிப்படையில் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.