விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
உயர் மின் கோபுரம் அமைப்புக்கு உரிய நஷ்டஈடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, தெள்ளார் அருகே பஞ்சரை கிராமத்தில் விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் பஞ்சரை, அகரம், குணக்கம்பூண்டி, ஆச்சமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டது.
விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைத்து அதற்கு உரிய நஷ்டஈடு விவசாயிகளுக்கு வழங்காததை கண்டித்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் அப்துல் காதர், விவசாய சங்க மாவட்ட உறுப்பினர் தங்கமணி, தெள்ளார் கோட்ட தலைவர் சிவராமன், மாவட்ட குழு உறுப்பினர் காளி, மாவட்ட விவசாய சங்க செயலாளர் வெங்கடேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.