இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்து உரிமையாளர் உயிரிழப்பு
வந்தவாசி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சென்னையை சேர்ந்த பஸ் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வந்தவாசி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சென்னையை சேர்ந்த பஸ் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 54), சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் பஸ்களை வாடகைக்கு இயக்கி வந்தார். இவர், வந்தவாசியை அடுத்த சென்னாவரம் பகுதியில் உள்ள பஸ் கட்டும் நிறுவனத்தில் தனது பஸ்சை கட்டுமானத்திற்காக விட்டு இருந்தார்.
இந்த பணிகளை பார்ப்பதற்காக சென்னாவரம் வந்த இவர், உணவு சாப்பிடுவதற்காக மருதாடு கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில், மருதாடு கிராமம் அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த வின்சென்டை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரத்தில் வேன் மோதி டிரைவர் பலி:
சாத்தனூர் அருகே மரத்தில் வேன் மோதி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள மாதலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 35), ஆவின் பால் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர், செங்கத்தில் இருந்து வேனை ஓட்டிக்கொண்டு பால் பாக்கெட்டை கிராமம் கிராமமாக சப்ளை செய்து வந்துள்ளார்.
சாத்தனூர் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த வேன் புளிய மரத்தில் மோதியது. இதில் வேனின் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தனூர் அணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பச்சையப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.