மேக்களூர்: தங்க கருட வாகனத்தில் வீதிஉலா வந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள்

மேக்களூர் நவநீதகோபால கிருஷ்ணசாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் வரதராஜபெருமாள் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-05-16 01:20 GMT

தங்க கருட வாகனத்தில் மாட வீதி உலா வந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள்

கீழ்பெண்ணாத்தூர் அருகில் உள்ள மேக்களூரில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த நவநீத கோபாலகிருஷ்ணசாமி கோவில் உள்ளது. கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு  நேற்று அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து காலை 6 மணியளவில் உற்சவர் வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி நாதஸ்வரம், மேள தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.   பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் வரதா.. கோவிந்தா.. ரெங்கா.. என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று மாலை 3 மணியளவில் விசேஷ திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7.30 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. அதைத்தொடர்ந்து இந்திர விமானத்தில் வரதராஜபெருமாள் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் இசைக்க வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  கருடசேவையையொட்டி கோவில் வளாகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Tags:    

Similar News