வட்டாட்சியா் அலுவலகத்தில் வெடித்த ‘டைல்ஸ்’ கற்கள்; நிலநடுக்கமா என, அச்சம்

கீழ்பென்னாத்தூர் தாலூகா அலுவலகத்தில், திடீரென டைல்ஸ்கள் வெடித்து பெயர்ந்ததால், வருவாய்த் துறையினர் அலறியடித்து வெளியேறினர்.;

Update: 2023-02-23 01:11 GMT

பெயர்ந்தது சிதறிய டைல்ஸ்கள்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் உள்ள தாலூகா அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிறது. கீழ்தளம் மற்றும் முதல்தளத்துடன் கூடிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகம் முழுவதும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 5.00  மணி அளவில் முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கில் திடீரென வெடிசத்தம் போன்று ஏற்பட்டு, தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் பெயர்ந்தன. நில அதிர்வு காரணமாக இருக்குமா? என்ற அச்சத்துடன் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர்.

சென்னையிலும் நில நடுக்கம் ஏற்படக் கூடும் என, புவியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதன்படி நேற்று காலை சென்னை அண்ணாசாலையில் கட்டிடங்களிலும், சில பகுதிகளிலும் நில அதிர்வினால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் கட்டிடங்களில் இருந்தவர்கள் அச்சத்துடன் வெளியேறினர். இதேபோல் நேபாளத்திலும், டெல்லியிலும், இலங்கையிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூரில் தாலூகா அலுவலகத்தில் தரையில் பதியப்பட்டிருந்த டைல்ஸ்கள் 'டமார்' என்ற சத்தத்துடன் பெயர்ந்தது சிதறியது.

இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் தாலூகா அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினால் தான் என்ன காரணத்தினால் டைல்ஸ்கள் பெயர்ந்தது என்பது தெரியவரும்.

சம்பவம் நடந்த நேரத்தில் தாசில்தார் சாப்ஜான் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இதுகுறித்து பொதுப்பணித்துறைக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். அவர்கள் நாளை(இன்று) வந்து ஆய்வு செய்ய உள்ளனர்  என்றார். 

Similar News