இளம்பெண் தற்கொலை உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
கீழ்பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டு நல்லான்பிள்ளை பெற்றான் தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசெல்வ ஆண்டவர். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரம்யா , இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரம்யாவிற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரம்யா மண்ணெண்ணெய் எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். வலி தாங்காமல் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகசென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்தார். திருமணம் ஆகி 6 வருடங்களே ஆன நிலையில் ரம்யா இறந்துள்ளதால் அது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரித்துரைக்கப்பட்டுள்ளது.
சாராய ஊறல் அழிப்பு
திருவண்ணாமலை மாவட்ட வனச்சரக அலுவலர் ஜெயவேல் தலைமையில் வனவர் ராஜேஷ் மற்றும் வன ஊழியர்கள் செல்வன், ஜெயமுருகன் ஆகியோர் ஜவ்வாது மலை தென் மலை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓடைப்பகுதியில் 5 பேர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடிக்க முயன்ற போது 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் செங்கம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரேசன் (வயது 40) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அங்கு 6 பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1500 லிட்டர் சாராய ஊறலை வனத்துறையினர் கைப்பற்றி அழித்தனர்.
சாராயம் காய்ச்சிய சுந்தரேசனை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மலை கிராமத்தை சேர்ந்த 4 பேரை தேடி வருகின்றனர். மேலும் போளூர் வனச்சரக அலுவலர் குமார் தலைமையிலான வனத்துறையினர். ஜவ்வாது மலை மூலக்காடு கிழக்கு பீட் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.