கீழ்பெண்ணாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

கீழ்பெண்ணாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

Update: 2024-08-09 01:47 GMT

வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார்

கீழ்பெண்ணாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஜி பே மூலம் பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பட்டா மாறுதல், நிள அளவை, வாரிசு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் தொடா்பான மனுக்களுடன் வரும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் நேற்று வியாழக்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அலுவலகத்தின் பல்வேறு அறைகள், பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலா்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.56,130 பறிமுதல் செய்யப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவினா் தெரிவித்தனா்.

மேலும் 14 அலுவலர்களின் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலம் கடந்த ஆறு மாதங்களில் ரூபாய் 25 லட்சத்து 35 ஆயிரத்து 824 பரிமாற்றம் நடத்தி இருப்பது தெரிய வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் மற்றும் அலுவலர்கள் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கு பிடி விசாரணை நடத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பணம் பரிமாற்ற செயலி மூலம் பரிமாறப்பட்ட பணம் எவ்வளவு என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் மட்டத்தில் பீதியும் கலக்கமும் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிரடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச வேட்டை நடைபெற்று வருகிறது. சென்ற மாதம் திருவண்ணாமலை நகராட்சியில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஆய்வாளர், அதுபோலவே சமீபத்தில் ஆரணி வட்டாட்சியர், கலசப்பாக்கம் பகுதியில் லஞ்சம் கேட்ட விஏஓ, செங்கம் பகுதியில் வருவாய் ஆய்வாளர், திருவண்ணாமலை இணை சாா் -பதிவாளா் அலுவலகம் எண்-2 , 1 , செங்கம் பத்திரப்பதிவு அலுவலகம் என தொடர்ச்சியாக அதிகாரிகள் சிக்கிக் கொண்டு வருவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News