வேட்டவலம் அருகே பயங்கரம்: 2 மாத பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை
வேட்டவலம் அருகே அதிகாலை பயங்கரம். 2 மாத பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை. போலீசார் விசாரணை.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள நாச்சியானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 25). ரக்கு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி திவ்யா (20) இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. முனியனின் உறவினர் வீட்டில் திருமண நிகழ்வுக்காக வேட்டவலம் அடுத்த வேளானந்தல் ஊராட்சிக்குட்பட்ட நெய்குப்பம் பகுதி சேர்ந்த தோமாஸ் என்பவரது மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முனியப்பன், அவரது மனைவி ஆகியோர் குழந்தையுடன் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள மற்றொரு உறவினர் ஏழுமலை வீட்டில் இரவு தங்கினர். நேற்று அதிகாலை 2 மணி அளவில் குழந்தை அழுததால் திவ்யா குழந்தைக்கு பால் கொடுத்து குழந்தையை தூங்க வைத்து அவரும் தூங்கியுள்ளார். பின்னர் நேற்று அதிகாலை 5 மணியளவில் திவ்யா எழுந்து பார்த்த போது தன் அருகில் படுத்திருந்த குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.
அருகில் படுத்திருந்த முனியன் மற்றும் அவரது உறவினர்கள் எழுந்து கேட்டபோது குழந்தையை காணவில்லை என்று கூறவே அக்கம் பக்கத்தில் அனைவரும் தேடினர். அப்போது தோமாஸ் வீட்டின் எதிரே உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை பிணமாக கிடப்பதை கண்டு குழந்தையின் பெற்றோர் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த வேட்டவலம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி சப் இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், டிஎஸ்பி குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
2 மாதமே ஆன குழந்தை தவழ்ந்து கூட வர முடியாது. எனவே குழந்தையை யாரோ தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து வேட்டவலம் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்றவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? குழந்தையின் பெற்றோருக்கு யாராவது எதிரிகள் இருக்கிறார்களா, சொத்துக்காக இந்த கொலை நடந்ததா, உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.