வேளாண் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம்: துணை சபாநாயகர்

வேளாண் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என துணை சபாநாயகர் கூறினார்.

Update: 2024-06-18 01:29 GMT

விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை வழங்கிய துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் ஆட்சியர்

இந்தியாவிலேயே வேளாண் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என துணை சபாநாயகர் பிச்சாண்டி பெருமிதத்துடன் கூறினார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெறையூர் ஊராட்சியில் வேளாண் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர விதைகளை வழங்கும் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர் அரக்குமார், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஞானசௌந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேளாண் உதவி இயக்குனர் ராம்பிரபு அனைவரையும் வரவேற்றார். உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் திட்ட விளக்க உரையாற்றினார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி மாவட்ட அளவில் 16 ஆயிரம் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதை விநியோக விழாவினை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கி பேசியதாவது;

இந்த விழாவில் கலந்துகொண்ட விவசாயிகள் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரவிதையின் பயன்கள் குறித்து தெரிந்து கொண்டு பயனடைய வேண்டும்.

முதலில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மண்வளம் உள்ளதா என்பதை வேளாண்மை துறை அலுவலர்கள் மூலம் மண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கரும்பு நட புதிய கருவிகள் வந்துள்ளது. ஆனாலும் விவசாயிகள் பழைய முறையிலேயே கரும்பு நடவு செய்கிறீர்கள். புதிய நடைமுறையை பயன்படுத்தி விவசாயம் செய்ய முன்வர வேண்டும். இந்தியாவிலேயே வேளாண் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலை அருகே உள்ள வள்ளி வாகையில் ரூபாய் மூன்று கோடி மதிப்பில் மணிலா எண்ணெய் பிழியும் ஆளை கொண்டுவரப்பட்டுள்ளது. வேளாண் குழுக்கள் அமைத்து விவசாயிகள் இதில் பயனடைய வேண்டும். படித்த பொறியியல் பட்டதாரிகள் இன்றைக்கு அரசு மற்றும் தனியார் வேலைகளை விட்டுவிட்டு விவசாய வேலைகளில் ஈடுபட தொட தொடங்கியுள்ளனர். இன்றைக்கு இயற்கையை பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமான உணவு கிடைக்கும் விவசாயிகள் யூரியா போன்ற உரங்களைத் தவிர்த்து இயற்கையான உரத்தை நிலத்தில் போட்டு விவசாய உற்பத்தி செய்ய முன்வர வேண்டும் இவ்வாறு துணை சபாநாயகர் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வேளாண் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News