சாலை விபத்தில் மாணவர் உயிரிழப்பு வழக்கில் திடீர் திருப்பமாக டிரைவர் மனு

விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்த வழக்கில் விபத்துக்கும், பேருந்துக்கும் தொடர்பு இல்லை என ஓட்டுநர் மனு அளித்துள்ளார்.;

Update: 2023-11-21 10:46 GMT

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்  (கோப்பு படம்).

கீழ்பென்னாத்தூர் அருகே விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்த வழக்கில் விபத்துக்கும், பேருந்துக்கும் தொடர்பு இல்லை என்பதால், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி காவல் கண்காணிப்பாளரிடம், ஓட்டுநர் குமார் மனு அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் வசிப்பவர் முன்னாள் ராணுவ வீரர் மோகன். இவரது மகன் முரளிதரன்.

இவர், சோமாசிபாடி புதூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இவருடன், படிப்பவர் மேக்களூருவில் வசிக்கும் சிவக்குமார் மகன் அரிதாஸ்.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி காலை மோகன் வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் அரிதாஸ் வந்துள்ளார்.

பின்பு முரளிதரனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார் .அன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டுக்கு இருவரும் திரும்பி வந்துள்ளனர். திருவண்ணாமலை திண்டிவனம் நெடுஞ்சாலையில் ஐங்குணம் கூட்டு சாலை அருகே சென்றபோது மழை காரணமாக இருசக்கர வாகனத்துடன் மாணவர்கள் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

இந்த விபத்தில் முரளிதரன் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்,

இது குறித்து கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் மோகன் அளித்த புகாரில்,

தனது மகன் முரளிதரன், அவரது நண்பர் அரிதாஸ் ஆகியோர் பள்ளிக்கு சென்றுவிட்டு, விடுமுறை என வீடு திரும்பினர். ஐங்குணம் கூட்டுச்சாலை அருகே வந்தபோது, இரு சக்கர வாகனத்துடன் தவறி கீழே விழுந்தனர். அப்போது, திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசுப் பேருந்து, எனது மகன் மீது மோதியதில் அவர் தூக்கி எறியப்பட்டார். இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோகன் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் அரசு பேருந்து ஓட்டுனர் மீது சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன் வழக்கு பதிவு செய்துள்ளார். இதையடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் , காவல்துறையினர்  ஆய்வு செய்து அதன் பதிவுகளை கொண்டு சென்றுள்ளனர்.

இதற்கிடையில், தன் மீது தவறான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு, ஓட்டுநர் குமார் மனு அளித்துள்ளார்.

அம்மனுவில், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்தை இயக்கி வந்தேன். விபத்து நடந்த இடத்தில், சாலையில் இடது திசையில் பேருந்து வந்தது. மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மாணவர்கள், கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்கும், பேருந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும், இரு சக்கர வாகனத்தை 17 வயது உள்ள பள்ளி மாணவர் ஓட்டி வந்துள்ளது. இவருக்கு சட்டப்படி ஓட்டுநர் உரிமம் கிடையாது. விபத்து நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, உரிய விசாரணை நடத்தி, எனது மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

இது குறித்து கீழ்பெண்ணாத்தூர் காவல் ஆய்வாளர் கூறுகையில், வீடியோ காட்சிகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News