சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.;

Update: 2022-10-29 01:20 GMT

வட்டார வளர்ச்சி அதிகாரியை முற்றுகையிட்ட பெற்றோர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அருகே அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வைப்பூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், அதன் அருகிலேயே அரசு உயா்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளியில் 63 பேரும், உயா்நிலைப் பள்ளியில் 90 பேரும் என மொத்தம் 153 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இவா்களுக்கு தொடக்கப் பள்ளி சத்துணவு மையத்தில் மதிய உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

வழக்கம்போல, நேற்று மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. உயா்நிலைப் பள்ளியில் 28 மாணவ, மாணவிகளும், தொடக்கப் பள்ளியில் 16 மாணவ, மாணவிகளும், 2 ஆசிரியா்களும் என மொத்தம் 46 போ மதிய உணவைச் சாப்பிட்டனா்.

அப்போது, 10-ஆம் வகுப்பு மாணவா் சாப்பிட்ட உணவில் பல்லியின் தலை இருந்தது தெரியவந்தது. அடுத்த சில நிமிடங்களில் மாணவா்கள் சிலா் வாந்தி எடுத்து மயங்கினா்.

இதனையடுத்து மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களை சாப்பிடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 4 மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.. இது குறித்து தகவல் அறிந்த வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சுகாதாரக் குழுவினர் விரைந்து சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டனர். தலைவலி, வயிற்று வலி, வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகள் இருந்த மாணவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு. வேட்டவலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்ட 11 மாணவ, மாணவிகள் வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த பெற்றோா்கள் திரண்டு வந்து பள்ளியையும், பேச்சுவாா்த்தை நடத்த வந்த கீழ்பென்னாத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) காந்திமதியையும் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்துணவு மைய ஊழியா்களின் கவனக்குறைவு காரணமாகவே இந்த நிகழ்வு நடந்துள்ளதாகக் கூறி, பெற்றோா்கள் முழக்கமிட்டனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி சத்துணவு கூடம் மற்றும் மாணவர்களுக்கு சத்துணவு சமைத்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு சமையலறை ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

உடனடியாக இது குறித்த தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

நீண்ட நேரத்துக்குப் பிறகு அதிகாரிகளிடம் சமாதானத்தை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Tags:    

Similar News