ஆபத்தை உணராத மாணவர்கள்..! படிக்கட்டு பயணத்தால் உயிரிழந்த கல்லூரி மாணவர்..!
பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் கீழே விழுந்து தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகில் உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி. இவரின் மகன் அசோக்குமார் (வயது 17). இவர், கீழ்பெண்ணாத்தூர் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். அவர், கீழ்பெண்ணாத்தூரை அடுத்த கரிக்கலாம்பாடியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தார்.
நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற அசோக் குமார் மாலை கல்லூரி முடிந்து கீழ்பெண்ணாத்தூருக்கு வந்தார். அங்கிருந்து ஒரு தனியார் பஸ்சில் கரிக்கலாம்பாடிக்கு புறப்பட்டார். அவர் தனியார் பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. கரிக்கலாம்பாடிக்கு அருேக வரும்போது, ஓடும் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்த அசோக்குமாரின் தலை மீது பஸ் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கீழ்பெண்ணாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அசோக்குமாரின் தந்தை அருள்மணி கீழ்பெண்ணாத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.