திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.9,680 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.9,680 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் வர இருப்பதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.;

Update: 2022-04-21 02:31 GMT

சட்டசபையில் திருவண்ணாமலை கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக துணை சபாநாயகர் கு பிச்சாண்டி கேள்வி எழுப்பி பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தில் பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கீழ்ப்பென்னாத்தூா் தொகுதி வேட்டவலம் பேரூராட்சிக்கு ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும். மேலும் எங்கள் மாவட்டத்தில் கூட்டுக்குடிநீா் திட்டம் நிறைவேற்றுவது பற்றி திருவண்ணாமலை, வேலூா் மாவட்ட ஆட்சியா்கள் பேசி தீா்வு காண வேண்டும் என்றாா்.

அதற்கு அமைச்சா் கே.என்.நேரு பதில் அளிக்கையில் 

வேட்டவலம் பேரூராட்சியில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுக்குடிநீா் திட்டம் பேரூராட்சிகளில் ஓரளவுதான் நடைபெற்றது. கடந்த ஆண்டு பேரூராட்சிகளுக்கு என்று ரூ.450 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அடிப்படை வசதிகளை செய்ய முதல்வா் உத்தரவிட்டாா். அதன்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முறை முதல்வரோடு பேசும்போது, 490 பேரூராட்சிகளில் எங்கெங்கெல்லாம் குடிநீா் பற்றாக்குறை இருக்கிறதோ, அந்த இடத்துக்கு குடிநீா் ஆதாரம் உள்ள இடத்திலிருந்து எடுத்துச்சென்று குடிநீா் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

முதல்கட்டமாக வரும் 4 ஆண்டுகளில் 130 பேரூராட்சிகளைத் தேர்வு செய்து குடிநீா் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா். அதன் அடிப்படை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற உள்ளன.

மேலும், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வேலூா் மாவட்டத்தின் ஒருபகுதியில் காவிரி நீரை அடிப்படையாகக் கொண்டு கூட்டுக்குடிநீா் திட்டத்தைச் செயல்படுத்த அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருகிறது. ரூ.9,660 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீா் திட்டத்தை அறிவித்துள்ளாா். அது ஆய்வில் இருக்கிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஒப்புதல் பெற்று, திட்டம் நடைமுறைக்கு வரும்போது திருவண்ணாமலையில் குடிநீா் பிரச்சினை தீரும் என்றாா்.

Tags:    

Similar News