திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு ரயில்: பாஜக வேட்பாளர் உறுதி
திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என பாஜக வேட்பாளர் தெரிவித்தார்
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன், கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேளானந்தல், செல்லங்குப்பம், அரும்பாக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். இவருக்கு, கிராம மக்கள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆரத்தி எடுத்து, பிரம்மாண்டமான வரவேற்பளித்தனா்.
அப்போது, வேட்பாளா் அஸ்வத்தாமன் பேசியதாவது:
நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி வர வேண்டும். வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு துரோகம் செய்த கட்சி திமுக. நான் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றால் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் பாதையும், திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூா், ஓசூா் வழியாக பெங்களூருவுக்கு ரயில்பாதையும் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். தென்பெண்ணையாறு-பாலாறு இணைப்புத் திட்டத்தை வரைவுப்படுத்தி விவசாயிகளை பயன்பெறச் செய்வேன்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் உணவு, இருப்பிடத்துடன் கூடிய இலவசப் பயிற்சி மையங்களை தொடங்கி நடத்துவேன். சுதந்திரப் போராட்ட தியாகி அா்த்தநாரீசவா்மாவுக்கு தபால் தலை வெளியிடப்படுவதுடன், அவருக்கு மணிமண்டபமும் கட்டப்படும்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் அனைத்து ஊராட்சிகளிலும் மக்களவைத் தொகுதியின் கிளை அலுவலகங்கள் திறக்கப்படும். இது, மக்கள் சேவை மையங்களாக செயல்படும். இந்த பகுதிக்கு அத்யாவசிய தேவைகளான கழிப்பறை வசதிகள் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைவரது இல்லத்திற்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும் . திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் தாமரை மலர்ந்தால் மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்வேன்.
இந்த மாவட்டத்தை பொருத்தவரை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கல்வி நிறுவனங்கள் இல்லை. இதனால் தான் உங்கள் பிள்ளைகள் தரமான கல்வி கற்றுக் கொள்ளாமல் உள்ளனர். முதலில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தரமான கல்வியை கொண்டு வர நவோதயா பள்ளிகள் வேண்டும், அப்படி கொண்டு வந்தால்தான் எதிர்கால சமுதாயம் வளர்ச்சி பெற முடியும்.
அதற்கு மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்க வேண்டும், எனவே பாஜக சார்பில் போட்டியிடும் எனக்கு இந்த முறை வாய்ப்பளியுங்கள், கண்டிப்பாக உங்களின் எதிர்காலம் நல்ல முறையில் இருக்க நான் இரவு பகல் பாராமல் பாடுபடுவேன் என பேசினார்.
பிரச்சாரத்தில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவா் பாலசுப்பிரமணியம், பாமக மாவட்டச் செயலாளா் ஏந்தல் பக்தவச்சலம், வன்னியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் நாராயணசாமி, மாவட்டத் தலைவா் பெரியசாமி, பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் கிஷோர் குமார், பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.