கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள கொட்டான் ஏரியை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

கொட்டான் ஏரி ஏரி தூர்வாரப்படாமல் இருப்பதால் இந்த ஏரியைச் சுற்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, காடு போல காட்சியளிக்கின்றன

Update: 2021-07-12 07:55 GMT

ஏரி தூர்வாரப்படாததால் சீமை கருவேல மரங்கள் காடு போல வளர்ந்து காட்சியளிக்கின்றன.

கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் கொட்டான் ஏரி என்ற ஒரு பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிதான் இந்த பகுதி மக்களுக்கு பெரிதும் ஆதாரமாக விளங்குகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த ஏரியை தூர்வார பட வேண்டும் என இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து வருகின்றனர். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாட்சியர் என அனைவருக்கும் பலமுறை மனுக்கள் அளித்தும் இந்த ஏரி தூர்வாரப்படாமல் இருப்பதால் இந்த ஏரியைச் சுற்றி சீமை கருவேல மரங்கள் காடு போல வளர்ந்து காட்சியளிக்கின்றன.

இதன் காரணத்தினால் நிலத்தடி நீர்வளம் பெரிய அளவில் பாதிப்பு உண்டாகிறது. அதுமட்டுமல்லாமல் ஏரிக்கு சொந்தமான இடங்களில் கட்டுமானங்கள் அதிகரித்துள்ளன. இந்த ஏரியை நம்பி பல ஏக்கர் நிலங்கள் விவசாய பணிகளும் குடிநீர்த் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆற்றுப் பகுதியில் கீழ்பெண்ணாத்தூர் சுற்றுவட்டாரத்தில் ஏதும் இல்லாத காரணத்தால் கோடைகாலங்களில் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

ஏரியைச் சுற்றி வளர்ந்துள்ள நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக் கருவேலம் மரங்களை வேரோடு அகற்றிவிட்டு, பயன் தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வான் தரும் மழையினை காக்க நீர்நிலைகளை முறையாக பேணி காக்க வேண்டும் என அரசுக்கு நமது கோரிக்கை .

Tags:    

Similar News