பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கீழ்பெண்ணாத்தூரில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் வழங்கினார்.;
பொங்கல் பண்டிகை முன்னிட்டு கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் 1300 பேருக்கு வேட்டி, சட்டை, சேலைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கீழ்பெண்ணாத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆறுமுகம் ஏற்பாட்டின் பேரில் அவரது தலைமையில் கீழ்பெண்ணாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 800 க்கும் மேற்பட்டவர்களுக்கு கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கி திமுக நிர்வாகிகள் தொண்டர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சிப் பணிகள், எந்த பணியாக இருந்தாலும் அதனை சிரமம் மேற்கொண்டு செய்து வருவதை பாராட்டுகிறேன்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் சவாலான தேர்தலாகும். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூத் கமிட்டி பணிகளை சரியான முறையில் பொங்கல் பண்டிகைக்குள் முடித்திட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களை வெற்றியடைய செய்யும் வகையில் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி அதிக வாக்குகள் பெரும் வகையில் உங்கள் பணி இருக்க வேண்டும் . இதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும், வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என துணை சபாநாயகர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர்கள், அவைத்தலைவர் ரவி ,ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றிய குழு துணை தலைவர்கள், மாவட்ட ஒன்றிய நகர அணி அமைப்பாளர்கள், நகர செயலாளர் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி செயலாளர் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூர் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த ராஜந்தாங்கல் தளவாய் குளத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஏற்பாட்டின் பேரில் திமுக நிர்வாகிகளுக்கு வேட்டி சட்டை சேலை மற்றும் ரொக்கம் என 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கி பொங்கல் வாழ்த்துகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி தெரிவித்தார்.