நெல் கொள்முதல் செய்து பணம் கொடுக்காமல் ஏமாற்றிய வியாபாரி கைது
வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்து ரூ72 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை பகுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 47). இவர் வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்யும் வியாபாரியாக செயல்பட்டு வந்துள்ளார்.
இவர் கடந்த 1-2-2021 முதல் 23-2-2021 தேதி வரை என 23 நாட்களில் ரூ.1 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரத்து 609 மதிப்பில் 12 ஆயிரத்து 84 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்துள்ளார். அதில் அவர் ரூ.1 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 533 மட்டும் வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். ஆனால் மீதமுள்ள ரூ.72 லட்சத்து 30 ஆயிரத்து 76 திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் அவரிடம் பணத்தை கேட்டும், பணத்தை கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ரவி திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், ராஜா ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.