நீலந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய செயலாளர் பணியிடை நீக்கம்
நீலந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜமீன் கூடலூர் கிராம ஊராட்சியின் செயலாளராக சுகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் நீலந்தாங்கல் கிராம ஊராட்சியின் செயலாளராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். மேலும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி அனுராதா சுகுமார் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலராக (தி.மு.க.) உள்ளார்.
சுகுமார் நீலந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோருக்கு எதிராகவும், ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்காததாலும் நிர்வாக நலன் கருதி திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகல்லப்பாடி கிராம ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் ஜமீன்கூடலூர் மற்றும் நீலந்தாங்கல் ஊராட்சி செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் புதிய பணியிடத்தில் பணியில் சேராமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஊராட்சி செயலாளர் சுகுமார், நீலந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் மணி வீட்டிற்கு சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீலந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் மணி காவல்துறையில் புகார் செய்தார். மேலும் துறை ரீதியான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில் ஊராட்சி செயலாளர் சுகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு ஆணை அவருக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து சுகுமார் கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சியின் போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி உயர் அதிகாரி ஒருவர் ஒன்றிய கவுன்சிலராக இருந்த எனது மனைவி அனுராதாவை கட்டாயப்படுத்தினார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக அ.தி.மு.க. ஆட்சியில் 3 முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டது.
தற்போது தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்தில் பொய்யான புகாரை கொடுக்க வைத்து 4-வது முறையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தனது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் முறையான விசாரணை நடத்த அதிகாரிகள் தவறி விட்டனர். பழிவாங்கும் படலத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். இதனை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.