கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையங்களை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியம் செவரப்பூண்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 12 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஊராட்சி மன்ற தலைவர் சின்னக்கண்ணு, சாமிநாதன் துணைத்தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வேலாயுதம் வரவேற்றார்.
விழாவில் துணை சபாநாயகர் பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார் .
அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை, உட்பட கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை தீட்டி முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் .
மாணவர்கள் சிறப்பான முறையில் கல்வி கற்கும் வகையில் காலை உணவு வழங்கும் திட்டம், அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்தான முறையில் உணவு வழங்கும் திட்டம் சிறப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் நல் முறையில் ஒத்துழைப்பு தர வேண்டும்.
மேலும் அனைத்து கிராமங்களும் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து திட்டங்களும் கிராம புற பகுதிகளில் செய்து வரும் திராவிட மாடல் ஆட்சியை ஓயாத உழைப்புடன் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
இந்த செவரப்பூண்டி கிராமத்திற்கு சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிரமணியன், வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராமப்புற நிர்வாக அலுவலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.