மனைவி சாவில் மர்மம்; கணவர் கைது

வேட்டவலம் அருகே மனைவி சாவில் மர்மம் நீடிப்பதால், கணவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-03-10 08:34 GMT

தூக்கிட்டு மனைவி இறந்ததால், கணவரை போலீசார் கைது செய்தனர் (கோப்பு படம்)

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே உள்ள பெரியஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் (வயது 32). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகள் ஜெயபாரதி (24) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

நரேஷ் குடிப்பழக்கம் கொண்டவர் என்றும், வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நரேஷ் சொந்தமாக தொழில் செய்ய ஜெயபாரதியின் பெற்றோரிடம் இருந்து ரூ.5 லட்சம் வாங்கிவர சொல்லி கொடுமைப்படுத்தி வந்ததாகவும், இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயபாரதி அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஒரு வருட காலமாக ஜெயபாரதி அவரது தாய் வீட்டிலேயே இருந்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் இதுகுறித்து புகார் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் அந்த பேச்சுவார்த்தையின் படி நரேஷ் தனது மனைவியுடன் ஒழுங்காக குடும்பம் நடத்துவதாக போலீசாரிடம் தெரிவித்து ஜெயபாரதியை தன்னுடன் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

சில வாரங்களில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று நரேஷ் வீட்டின் மாடியில் உள்ள அறையில் ஜெயபாரதி தூக்கி தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார் இது குறித்து தகவல் அறிந்த வெட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபாரதியின் உடலை விட்டு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இதுகுறித்து ஜெயபாரதியின் தாய் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் ஜெயபாரதி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் திருவண்ணாமலையில் காலை திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஜெயபாரதியின் உறவினர்கள் ஜெயபாரதியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனவே இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் மேலும் நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்று தரையில் அமர்ந்து கதறி அழுது, போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் வேட்டவலம் போலீசார் நரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் உயிரிழந்த ஜெயபாரதிக்கு திருமணம் நடைபெற்று 5 ஆண்டுகள் தான் ஆவதால், இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News