கீழ்பெண்ணாத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
கீழ்பெண்ணாத்தூரில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் நகர அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். நகர அவை தலைவர் பாண்டுரங்கன், நகர இணை செயலாளர் சிவராமன், பொருளாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசும் போது கீழ்பெண்ணாத்தூர் நகர அ.தி.மு.க. பூத் கமிட்டி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே மாவட்டத்தில் மற்றவர்களை காட்டிலும் விரைவாக செய்து முடித்ததற்கு நன்றியையும் பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோன்று கட்சி பணிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்புடன் பணியாற்றுவதற்கு உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற ஆறாவது மாதத்திலேயே மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சிறப்பான ஆட்சி நடப்பது போன்ற மாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி சிறப்பான ஆட்சி நடத்தினார். புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. இதனால் மக்களிடையே வெறுப்பு ஏற்பட்டதன் காரணமாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாண்டிச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்.
எனவே பூத் கமிட்டி உறுப்பினர்கள் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும்.
அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றுபட்டு திறம்பட பணியாற்ற வேண்டும் என உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திருவண்ணாமலை கிழக்கு பூத் கமிட்டி பொறுப்பாளரும், மாநில அமைப்பு செயலாளருமான ராமு, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன், கீழ்பெண்ணாத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ அரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல்களில் எவ்வாறு பணியாற்றி வெற்றி வாய்ப்பை பெறுவது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர் .
இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ,அனைத்து அணி நிர்வாகிகள், வட்ட செயலாளர், கழக தொண்டர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.