திருவண்ணாமலை அருகே நடந்த சாலை விபத்தில் ஐ.டி. ஊழியர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேரிகார்ட் மீது மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஐடி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணி புரியும் இளைஞர் முகமது. இவர் தனது மூன்று நண்பர்களுடன் தனித்தனியாக இருசக்கர வாகனத்தில் பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்நிலையில் சுற்றுலாவை முடித்துவிட்டு பெங்களூருக்கு திரும்பினார். அப்பொழுது திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மீது முகமதுவின் இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
இதன் காரணமாக இரு சக்கர வாகனம் சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு சாலையில் உரசியவாறு வந்து கொண்டிருந்த அதே வேகத்தில் இழுத்துச் சென்றுள்ளது.
இதனால் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. இந்த தீயானது முகமது மீதும் பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ளும் போது தலைக்கவசத்தை மறக்காமல் அணிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நமது எதிர்காலத்தையும் நமக்காக வீட்டில் உள்ள உறவுகளையும் மனதில் கொண்டு மிகவும் கவனமாக நிதானமான வேகத்திலேயே பயணிக்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்தனர்.