பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணை வழங்கிய துணை சபாநாயகர்

பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையை துணை சபாநாயகர் வழங்கினார்.

Update: 2024-09-18 03:02 GMT

கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணி ஆணையை வழங்கிய துணை சபாநாயகர்

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 105 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு உண்டான பணி ஆணையைசட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வழங்கினார்.

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நுழைவுவாயில் திறப்புவிழா  நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 105 பயனளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பணி ஆணையை வழங்கினார்.

இந்த விழாவுக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அண்ணாமலை ஒன்றியக்குழு துணைத் தலைவர் உஷாராணி சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் பாலு, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) கோபு ஆகியோர் முன்னிலை வகிக்க, ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி புதியதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நுழைவுவாயிலினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்த அவர், தொடர் ந் து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 105 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் (வீடு) கட்டிடம் கட்டுவதற்கான பணி ஆணையினை வழங்கி சிறப்புரையாற்றுகையில்,

இங்கே புதியதாக கட்டப்பட்டுள்ள துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் பெரியசாமி விளையாட்டு நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர்கள் இந்த புதிய அலுவலகம் கட்ட துணை புரிந்தார்கள். அவர்களுக்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாவட்டத்தில் பல ஊராட்சி ஒன்றியங்களில் புதியதாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இன்னும் சில ஊராட்சி ஒன்றியங்களில் புதிய கட்டிடங்கள் திறக்கப்படவுள்ளன. விரைவில் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டப்படும். கலைஞரின் கனவு திட்டத்தின்கீழ் கிராமங்களில் குடிசைகளே இல்லாத நிலை மாற்றப்பட்டு இன்றைக்கு ஏழை எளிய மக்களின் நலன்கருதி புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைக்கு ஆணைகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் விரைந்து வீடுகளை கட்டி முடிக்க வேண்டும். பறவைகளுக்குகூட இன்றைக்கு கூடுகள் கட்டிக்கொள்கிறது.

எனவே கிராமங்களில் வாழும் மக்கள் தங்களுக்கென்று ஒரு சொந்தவீடு கட்டிக்கொள்ள இந்த திராவிட மாடல் அரசு துணை நிற்கிறது. இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு தொலைநோக்கு வளர்ச்சி திட்டங்களை இன்றைக்கு பிற மாநிலங்கள் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறது. எனவே இந்த அரசுக்கு என்றைக்கும் நீங்கள் துணை நிற்கவேண்டும் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள் ,ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற ஆணையாளர் ,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News